ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது...!


ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது...!
x
தினத்தந்தி 8 Jan 2023 3:14 AM GMT (Updated: 8 Jan 2023 3:24 AM GMT)

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தச்சங்குறிச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்ததோடு, ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதி அளிக்க வேண்டும் என முறையிட்டனர். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தச்சங்குறிச்சிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்கள், விழாக்குழுவினருடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஆணை அரசிதழிலும் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்காக சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக செய்யும் பணி நடைபெற்றது.

இதையடுத்து, தேவாலயத்தின் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காளைகள் வரிசையாக அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகள் மீது வெயில் படாமல் இருப்பதற்காக திரைகள் அமைக்கப்பட்டன. மேலும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் பகுதியில் கூடுதலாக தேங்காய் நார்கள் கொட்டப்பட்டன.மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதை முன்னிட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் முதலி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தங்கக்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி,, மெய்யநாதன் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா தொடங்கி வைத்தனர்.

நேரமின்மை காரணமாக முதல் கட்டமாக போட்டி தொடங்குவதற்கு சிறுது நேரத்திற்கு முன்பே 15 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டனர். ஜல்லிக்கட்டில் பெற்றி பரும் வீரர்களுக்கு பைக்குகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


Next Story