ஒரு வாரத்துக்கு பிறகு மீன்பிடிக்க சென்று கரைதிரும்பிய ராமேசுவரம் மீனவர்கள்
ஒரு வாரத்துக்கு பிறகு மீன்பிடிக்க சென்று கரைதிரும்பிய ராமேசுவரம் மீனவர்கள்
ராமேசுவரம்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று காலை இறால், நண்டு, கணவாய், காரல் உள்ளிட்ட பலவகை மீன்களுடன் கரை திரும்பினார்கள். அந்த மீன்கள் கூடைகளில் நிரப்பப்பட்டு, இறக்கி வைக்கப்பட்டு இருந்தன. வியாபாரிகள் ஏராளமானோர் போட்டிபோட்டு வாங்கிச்சென்றனர்.
இதுபற்றி விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறிய போது, கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏராளமான மீனவர்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இதனால் குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று இருந்தன. மீன்கள் எதிர்பார்த்த அளவு வரத்து இல்லை. இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன்பிடித்து வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு வாரமாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் துறைமுகமானது நேற்று மீனவர்கள் கரை திரும்பிய நிலையில், களைகட்டி காணப்பட்டது.