விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றாவிட்டால் போராட்டம்


விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றாவிட்டால் போராட்டம்
x

விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கரூர்

குடோனை பார்வையிட்டனர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் விதிமுறைகளை மீறி ரசாயன பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாக புகார் வந்தது.

இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விநாயகர் சிலைகள் இருந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் நேற்று சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் தலைமையில், மாநில இளைஞர் அணி கார்த்திக், இந்து மக்கள் கட்சியின் நிலைகுழு உறுப்பினர் சுரேஷ்மற்றும் இந்து அமைப்பினர் சீல் வைத்த குடோனை பார்வையிட்டனர்.

பேட்டி

சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் சுங்ககேட் பகுதியில் வடமாநிலத்தவர்கள் விநாயகர் சிலைகளை தயாரித்து குடோனில் விற்பனைக்காக வைத்துள்ளனர். அந்த குடோனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு செய்து, அங்குள்ள சிலைகளில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த குடோனுக்கு சீல் வைத்து உள்ளனர். அமராவதி ஆற்றில் கழிவுநீர் செல்வது மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியவில்லை.

போராட்டம் நடத்தப்படும்

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்ற தூண்டுதலின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு உள்ளது. இதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் செலுத்தி குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி விநாயகர் சிலைகளை மீட்டு சம்பந்தப்பட்ட வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கரூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story