தப்பி ஓடியவரை விரட்டி, விரட்டி வெட்டி சாய்த்த கும்பல்
திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளியை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி சென்று வெட்டிக்கொலை செய்தது.
தொழிலாளி
திண்டுக்கல் மலைக்கோட்டையை அடுத்த முத்தழகுபட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தபாபு (வயது 29). கூலித்தொழிலாளி. அதே பகுதியில் முருகேஸ்வரி (58) என்பவர் மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் குடைப்பாறைப்பட்டியில் வசித்து வருகிறார்.
இவருடைய மகன்களான சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருளானந்தபாபுவின் நண்பர்கள் ஆவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் நண்பர்களின் தாயாரான முருகேஸ்வரிக்கு, அருளானந்தபாபு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
மர்ம கும்பல் துரத்தியது
இந்த நிலையில் நேற்று அருளானந்தபாபு தனது மோட்டார் சைக்கிளில் குடைப்பாறைப்பட்டிக்கு சென்று முருகேஸ்வரியை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து மாலை சுமார் 3.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் முத்தழகுபட்டிக்கு திரும்பி வந்தார். முத்தழகுபட்டியை அடுத்த அகஸ்தியர்தெப்பம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி ஆகியவற்றுடன் அவரை துரத்தியது. ஏதோ விபரீதம் நடக்க போவதை அறிந்த அருளானந்தபாபு அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். ஆனால் விடாமல் துரத்திய அந்த கும்பல் சிறிது தூரத்தில் அவரை மடக்கியது.
விரட்டி, விரட்டி வெட்டினர்
இதனால் அருளானந்தபாபு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அருகில் இருந்த கருவேல மரக்காட்டுக்குள் தப்பி ஓடினார். அங்கும் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை விரட்டி சென்று வெட்டியது. தலையில் பலத்த வெட்டுகள் விழுந்ததால் அவர் கீழே சாய்ந்தார். அதன்பின்னரும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியது.
இதனால் அருளானந்தபாபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதன்பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலைக்கான காரணம் தெரிந்தால் மட்டுமே கொலையாளிகளை கைது செய்ய முடியும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.