வங்கியில் கடன் வாங்கி தருவதாகவியாபாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த கும்பல் கட்டிட தொழிலாளி கைது


வங்கியில் கடன் வாங்கி தருவதாகவியாபாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த கும்பல் கட்டிட தொழிலாளி கைது
x

அஞ்சுகிராமத்தில் வியாபாரியிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்தவர்களில் கட்டிட தொழிலாளியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அஞ்சுகிராமத்தில் வியாபாரியிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்தவர்களில் கட்டிட தொழிலாளியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ரூ.3 கோடி கடன்

நெல்லை மாவட்டம் மாடன் பிள்ளைதர்மம் அம்மன்கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 41). இவர் அந்த பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம், அவருடைய கடையை பெரிய கடையாக மாற்ற வங்கியில் ரு.3 கோடி கடன் பெற்றுத் தருவதாகவும், இதற்கு மானியம் 35 சதவீதம் கிடைக்கும் என்றும் நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராபின்சன் என்ற படையப்பா, ராஜசேகர், அவரது தந்தை கொளஞ்சி, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகில் உள்ள ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வீரமுத்து, சென்னை காமராஜபுரம் தென்றல்நகர் பூங்கா சாலையைச் சேர்ந்த கவிதா மற்றும் ஒரு மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆகியோர் இணைந்து கூறியுள்ளனர்.

மேலும் கடன் வாங்கித்தர முதலில் ரூ.75 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இதை நம்பிய பிரபாகரனிடம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பல தவணைகளாக அழகப்பபுரத்தில் உள்ள ஒரு வங்கி முன்பாக நின்று ரொக்கமாகவும், வங்கி கணக்குகள் மூலமாகவும் ரூ.40 லட்சத்து 27 ஆயிரத்து 104-ஐ பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னபடி வங்கிக்கடனை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.

கைது

இதுகுறித்து பிரபாகரன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வழக்குப்பதிவு செய்து ராபின்சன் என்ற படையப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தார். கைதான ராபின்சன் கட்டிட தொழிலாளி ஆவார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story