பணம் வைத்து சூதாடிய கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடிய கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம் 8 மோட்டார் சைக்கிள் 5 செல்போன் ரூ.28 ஆயிரம் பறிமுதல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள வடமலையனூர் கிராமம் கெடிலம் ஆற்றுக்கு போகும் பாதையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்டதும் சூதாட்டம் ஆடிய கும்பல் தங்களது மோட்டார் சைக்கிள், செல்போன், பணம் ஆகியவற்றை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து 8 மோட்டார் சைக்கிள், 5 செல்போன்கள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த காத்தமுத்து மகன் செந்தில், எம்.குன்னத்தூர் கேசவன் மகன் பிரபு, வடமலையனூர் தண்டபாணி மகன் சுபாஷ், அரகண்டநல்லூர் திருவேங்கடம் மகன் இளையராஜா மற்றும் ராமலிங்கம் மகன் விஜயராஜ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.