"மக்களுக்கு பயன் தரும் புதிய யுக்திகளை பயன்படுத்த அரசு தயாராக உள்ளது" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மக்களுக்கு பயன் தரும் புதிய யுக்திகளை பயன்படுத்த அரசு தயாராக உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 Jun 2022 10:55 AM GMT (Updated: 2 Jun 2022 11:02 AM GMT)

ஒவ்வொரு துறையும் தங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து, நலத்திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 19 அரசு துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதன்படி தொழில்துறை அதிகாரிகளுக்கு அவர் வழங்கிய அறிவுறுத்தல்களில், புதிய தொழில்கள் தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும், நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அதனை நீக்கி, அனுமதிகள் வழங்குவதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், பணிகளை துரிதப்படுத்தி வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனை நிர்வாகத்தை கண்காணித்து மக்கள் விரும்பும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கிராமப்புற மக்களை மையமாகக் கொண்டு, குடிநீர், வீட்டுவசதி திட்டம், வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து பயிர் வகைகளை அறிமுகப்படுத்தி மகசூலை பெருக்க வேண்டும் என வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு துறையும் தங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய யுக்திகளை, அவை எங்கு இருந்தாலும், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியதாக இருந்தால் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் துறை செயலாளர்கள் ஈடுபட வேண்டும் எனவும், அதனை ஊக்குவிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story