மிக்ஜம் புயல் பாதிப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


மிக்ஜம் புயல் பாதிப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x
தினத்தந்தி 9 Dec 2023 9:13 AM GMT (Updated: 9 Dec 2023 9:21 AM GMT)

அரசின் மெத்தனப் போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை திருவொற்றியூர் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;

"அரசின் மெத்தனப் போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான உணவு, பால், தண்ணீர் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை.

தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சினைகளை முறையாக கையாளவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததாக சொன்னார்கள். இனி சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காது என முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சொன்னார்கள். ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என தமிழக அரசு சொன்னது. ஆனால், எங்கே பார்த்தாலும் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

புயல் வரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும், அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டது. மக்களுக்கு உடனடியாக தக்க ஆலோசனைகள் வழங்கவில்லை. மிக்ஜம் புயல் பாதிப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்.

அ.தி.மு.க. ஆட்சியின்போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுத்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கையாக 3 திட்டங்கள் கொண்டு வந்தோம். புயல் காலங்களில் மக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினோம்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story