எம்.ஜி.ஆரை தவிர்த்து திராவிட இயக்க வரலாறை எழுதிவிட முடியாது- சைதை துரைசாமி


எம்.ஜி.ஆரை தவிர்த்து திராவிட இயக்க வரலாறை எழுதிவிட முடியாது- சைதை துரைசாமி
x

‘திராவிட இயக்க வரலாற்றை எம்.ஜி.ஆரை தவிர்த்து எழுதிவிட முடியாது’ என எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் சைதை துரைசாமி புகழாரம் சூட்டினார்.

105-வது பிறந்தநாள் விழா

உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில், சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். திரைப்படத் திறனாய்வு சங்க தலைவர் எஸ்.எம்.மனோகரன் தலைமை தாங்கினார். உலக எம்.ஜி.ஆர். பேரவை ஒருங்கிணைப்பாளர் முருகு பத்மநாபன், எம்.ஜி.ஆர். மனிதநேய அறக்கட்டளை குழு நிர்வாகி எம்.ஜி.ஆர்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை எஸ்.துரைசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் டி.ஜி.பி. திலகவதி., திரைப்பட நடிகர் வின்சென்ட் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுதிவிட முடியாது

விழாவில் சைதை எஸ்.துரைசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். நம்மை விட்டு பிரிந்து 35 ஆண்டுகள் ஆனாலும், உள்ளத்தாலும், உணர்வாலும் அவர் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எம்.ஜி.ஆர். ஓர் அதிசயம், அற்புதம், அவதாரம் ஆவார். எம்.ஜி.ஆரை தவிர்த்து திராவிட இயக்க வரலாற்றை எழுதிவிட முடியாது.

1953-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு தானும் வளர்ந்து, இயக்கத்தையும் வளர்ந்தார். இதனை நன்கு உணர்ந்த அண்ணா, திரையுலக மரத்தில் ஒரு கனி பழுத்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்த கனி யார் மடியில் விழுமோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். நல்லவேளையாக அந்த கனி என் மடியில் விழுந்தது. அந்த கனியை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்றார்.

133 திரைப்படங்களில்...

எம்.ஜி.ஆரிடம் அண்ணா கூறும்போது, உன் நிதி தேவையில்லை, உன் முகத்தை மக்களிடம் காட்டு எனக்கு 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று சொன்னார். 1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 15 இடங்களில் வெற்றி பெற்று தனது முதல் கணக்கை தொடங்கியது என்றால் அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். தான். 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் தி.மு.க. கொடியை எம்.ஜி.ஆர். பிடித்து காண்பித்த போது விண்ணதிர கைத்தட்டும், விசிலும் பறந்தது. பின்னர் அது எம்.ஜி.ஆர். கொடி என்றே பேசப்பட்டது.

எம்.ஜி.ஆர். இந்த மண்ணில் மக்களுக்கு என்ன செய்தார் என்றால், திருவள்ளுவர் 133 அதிகாரங்களில் மக்களுக்கு உரைத்த உலகப்பொதுமறையை, எம்.ஜி.ஆர். 133 திரைப்படங்களில் ஆயிரத்து 96 பாடல்கள் மூலம் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். எனவே, எம்.ஜி.ஆரின் எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்து அடுத்து வரும் தலைமுறைக்கும் அவரது கருத்துகள் பயன்படும். கடைசி மனிதன் இருக்கும் வரை அவரது புகழ் இந்த மண்ணில் நீடித்து நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story