'பொன்னியின் செல்வன்' ஏற்படுத்திய தாக்கம் - தமிழக சுற்றுலாத்துறையின் அசத்தல் திட்டம்
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொன்னியின் செல்வன் சுற்றுலா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை,
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே தமிழ் வாசகர் உலகில் புகழ் பெற்று விளங்கும் 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு, இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.
காதல், போர், துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம் என வாழ்வின் அனைத்து கலவையான உணர்வுகளையும் கொண்ட 'பொன்னியின் செல்வன்' நாவல், தற்போதைய இளம் தலைமுறையினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. புத்தகமாக மட்டுமல்லாது, ஆடியோ, காணொலி என பல்வேறு வடிவங்களில் 'பொன்னியின் செல்வன்' கதை பலரை சென்றடைந்து கொண்டிருக்கிறது.
அதே சமயம் இந்த கதையில் வரும் இடங்களை நேரில் காணும் ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே சில தனியார் அமைப்புகள் சார்பில் 'பொன்னியின் செல்வன்' சுற்றுலா நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக சுற்றுலாத்துறையும் 'பொன்னியின் செல்வன் சுற்றுலா' என்ற பெயரில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சென்னையில் தொடங்கி தஞ்சாவூர், பின்னர் மீண்டும் சென்னை என 2 இரவு, 3 பகல்களுக்கு இந்த சுற்றுலா திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொகுசு பேருந்தில் மாமல்லபுரம், வீரநாராயணபுரம் எனப்படும் வீராணம் ஏரி, கும்பகோணம், பட்டீஸ்வரம், திருவையாறு, நாகை உள்பட கதையில் வரும் பல்வேறு இடங்களுக்கும், அந்த பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களுக்கும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தின் வழியே பயணிக்கிறது. அதே சமயம், தமிழக சுற்றுலாத்துறையின் 'பொன்னியின் செல்வன் சுற்றுலா' சோழர் கால கல்வெட்டுகள், கோவில் கட்டடக்கலை, சிற்பங்கள் ஆகியவற்றை கண்டு களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் நிபுணர்களும் உடன் வருகின்றனர்.
இதில் ராஜராஜசோழன் குறித்த தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு, பழுவேட்டரையர்களை குறிப்பிடும் பழுவூர் கோவில் கல்வெட்டு, கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவி பற்றிய திருநல்லம் கல்வெட்டு, வானவன் மாதவி பற்றி குறிப்பிடும் உடையார்குடி கல்வெட்டு, உத்தம சோழர் குறித்த திருக்கோடிகா கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் பற்றிய குடந்தை நாகேஸ்வரர் கோவில் கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரணமானவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து விவரிக்கும் உடையார்குடி கல்வெட்டு ஆகியவற்றை நேரில் காட்டி விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்லும் நபர்களுக்கு உணவு, தங்குமிடம் ஆகியவை சேர்த்து ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 11 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை ஒரு பொருட்டாக கருதாமல், தமிழர் வரலாற்றின் மிக முக்கியமான பகுதிகளையும், 'பொன்னியின் செல்வன்' நாவலில் படித்த இடங்களையும் நேரில் பார்த்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.