13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்ட விவகாரம்


13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்ட விவகாரம்
x

ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோர்ட்டில் அனுமதி கோரிய விவகாரத்தில் வருகிற 14-ந் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோர்ட்டில் அனுமதி கோரிய விவகாரத்தில் வருகிற 14-ந் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கு

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலையில் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி-கல்லணை சாலையில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி கரையோரம் கிடந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகள் கடந்த நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக்குழு

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை சூப்பிரண்டு மதன் உள்ளிட்டோர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கடந்த சில மாதங்களாக விசாரணையை நடத்தி வருகிறார்கள். இதில் ராமஜெயம் குறிப்பிட்ட மாடல் காரில் தான் கடத்தப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர். அதே மாடல் காரை வைத்துள்ள உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் என தமிழகம் முழுவதும் 1,500 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும், சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் சிலரை பிடித்து விசாரித்தனர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 13 பேர் கொண்ட சந்தேக நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

உண்மை கண்டறியும் சோதனை

இதற்காக சந்தேக நபர்களான சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்கிற லெப்ட் ஆகிய 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இருந்தால் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்றும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன்படி சந்தேக நபர்கள் தங்களது வக்கீல்களுடன் கடந்த 1-ந் தேதி திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் ஆஜராகினர். அப்போது உண்மை கண்டறியும் சோதனை நடத்த அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இதில் 8 பேர் மட்டும் ஆஜராகினர். மற்றவர்களுக்கு அவர்களுடைய வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். அப்போது சிறப்பு புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆஜராகி சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்கோரினார். அதற்கு எதிர்தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். எந்த அடிப்படையில் இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. வழக்கில் அதற்கான முகாந்திரம் உள்ளதா?. எந்தவிதமான கேள்விகள் கேட்க இருக்கிறார்கள். சோதனை நடத்தும்போது, தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இது குறித்த ஆட்சேபனைகள் இருந்தால் அதை மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியதோடு, வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் உத்தரவிட்டார். இதனால் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story