நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்


நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்
x
தினத்தந்தி 27 Sep 2023 10:30 PM GMT (Updated: 27 Sep 2023 10:30 PM GMT)

கூடலூரில் நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாத யாத்திரை

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பாத யாத்திரையை சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் நேற்று பாத யாத்திரையை தொடங்கினார். கூடலூர்-கோழிக்கோடு சாலையில் உள்ள நர்த்தகி பகுதியில் இருந்து பாத யாத்திரை புறப்பட்டு பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, ஐந்து முனை சந்திப்பு வழியாக சென்றது.

அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக ஆதிவாசி மக்கள் ஏராளமானவர்கள் அண்ணாமலையை சந்தித்தனர். தொடர்ந்து செண்டை மேளம், தாரை தப்பட்டைகள் முழங்க பாதயாத்திரை நடைபெற்றது. பின்னர் கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்விக்கொள்கை

நீலகிரியில் தமிழ், மலையாளம், கன்னடம், உருது உள்பட பல்வேறு மொழிகளை பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். ஆனால், அவர்களை மாநில அரசு மதிப்பதில்லை. புதிய கல்விக்கொள்கையின் படி, அவரவர்கள் தங்களது தாய்மொழியில் கல்வி கற்கலாம். வேறு மொழிகளை பேசக்கூடிய மக்களை மதிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கம். இதனால் மும்மொழி கல்வி கற்கலாம்.

ஆனால், தமிழக அரசு 3 மொழிகளை படிக்க அனுமதிப்பது இல்லை. தமிழகத்தின் விலங்கு வரையாடு. அதை பாதுகாக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு பிறகு ரூ.25 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதை மாற்ற பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை வெற்றி பெற வைப்பது நமது கடமை. 3-வது முறையாக 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.

பச்சை தேயிலை

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தொகுதி பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. சனாதனத்தை தவறாக பேசி புது பிரச்சினைகளை உருவாக்குகிறார். நீலகிரியில் 25 ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறி தொடர் போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். அவர்களுக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கிறது. மேலும் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ வசதி இல்லாத நீலகிரியில் மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. படுகர் சமுதாயத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. புலிகள் காப்பகம் வந்த பிறகு மசினகுடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் இணைப்புகள்

பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் அனைவருக்கும் வீடு, கழிப்பறைகள், சாலையோர வியாபாரிகள் உள்பட தொழில் தொடங்குபவர்களுக்கு முத்ரா கடன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு வழங்குதல் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தமிழகத்தில் தொழில் தொடங்க 30 சதவீதம் கமிஷன் கேட்பதால், அதன் உரிமையாளர்கள் சென்று விடுகின்றனர்.

நீலகிரியில் 11,232 குடும்பங்களுக்கு வீடுகள், 78,260 வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள், 40,238 குடும்பங்களுக்கு கழிப்பறைகள், 17,412 பேருக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள், 66,656 பேருக்கு ரூ.5 லட்சம் வரை பாரத பிரதமரின் மருத்துவ காப்பீடு, 48,163 விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ரூ.1,568 கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டு உள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்

சேரம்பாடியில் காட்டு யானை தாக்கி குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதுடன் பா.ஜ.க. சார்பில் நிதியுதவி வழங்கப்படும். கூடலூரில் நில பிரச்சினை, மின்சாரம் இல்லை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு தீர்வு காண நீலகிரியில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும்.

ஓவேலி பகுதியில் வனவிலங்குகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதே பகுதியை சேர்ந்தர்கள் அடங்கிய சிறப்பு குழுவை பா.ஜ.க. நியமிக்கும். அந்த குழுவை டெல்லிக்கு அழைத்து சென்று சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பா.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் சவுந்திர பாண்டியன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அண்ணாமலை அங்கிருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார்.

அண்ணாமலை பாத யாத்திரையில் மாற்றம்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி வாரியாக பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் பாத யாத்திரை நேற்று நடந்தது. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாத யாத்திரை நடைபெறுவதாக இருந்தது. அதனை ஒத்தி வைத்து இருப்பதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கொண்டாடும் மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இன்று மிலாது நபி ஊர்வலம் மற்றும் நமது பாத யாத்திரையால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டுப்பாளையத்தில் இன்று (28-ந் தேதி) நடைபெற இருந்த 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை வருகிற 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களையும், மேட்டுப்பாளையம் மக்களையும் 4-ந் தேதி பாத யாத்திரையின் போது சந்திக்க ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story