இன்று வெளியாகிறது அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்


இன்று வெளியாகிறது அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
x
தினத்தந்தி 21 March 2024 2:21 AM GMT (Updated: 21 March 2024 6:13 AM GMT)

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. .

சென்னை,

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முதற்கட்ட பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில் 16 பேர் இடம் பெற்றிருந்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

1.சென்னை வடக்கு - ராயபுரம் ஆர்.மனோ, அமைப்பு செயலாளர்.

2.சென்னை தெற்கு - டாக்டர் ஜெ.ஜெயவர்தன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்.

3.காஞ்சிபுரம் (தனி) - ஈ.ராஜசேகர், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்.

4.அரக்கோணம் - ஏ.எல்.விஜயன், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர்.

5.கிருஷ்ணகிரி - வி.ஜெயபிரகாஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர்.

6.ஆரணி - ஜி.வி.கஜேந்திரன், ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர்.

7.விழுப்புரம் (தனி) - ஜெ.பாக்யராஜ், விழுப்புரம் மாவட்ட மாணவரணி செயலாளர்.

8.சேலம் - பி.விக்னேஷ், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்.

9.நாமக்கல் - எஸ்.தமிழ்மணி, நாமக்கல் மாவட்ட வர்த்தகரணி செயலாளர்.

10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்.

11.கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்.

12.சிதம்பரம் (தனி) - எம்.சந்திரகாசன், பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்.

13.நாகை (தனி) - ஜி.சுர்சித் சங்கர், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்.

14.மதுரை - டாக்டர் பி.சரவணன், மருத்துவர் அணி இணை செயலாளர்.

15.தேனி - வி.டி.நாராயணசாமி, தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர்.

16.ராமநாதபுரம் - பா.ஜெயபெருமாள். விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர்.

இவ்வாறு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று அ.தி.மு.க. தனது கூட்டணியில் ஓரளவு தொகுதி பங்கீடை முடித்தது. அதன்படி தே.மு.தி.க.வுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்தவகையில் அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை இதுவரை 23 தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. புதுச்சேரி சேர்த்து மீதமுள்ள 17 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுமா? அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஏதாவது ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை சிறிய கட்சிகளே பெரியளவில் அக்கட்சிக்கு ஆதரவு தந்துள்ளன. எனவே சிறிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. தொகுதிகளை விட்டுத்தராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதர 17 தொகுதிகளில் அ.தி.மு.க.வே போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story