மயிலாடுதுறைக்கு கடத்தி சென்றபோது விபத்தில் சிக்கிய லாரி
திருக்கோவிலூரில் இருந்து டிப்பர் லாரியை மயிலாடுதுறைக்கு கடத்தி சென்றபோது வழியில் விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
திருக்கோவிலூர்
ஒப்பந்ததாரர்
திருக்கோவிலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் குணசேகரன்(வயது 49). ஒப்பந்ததாரரான இவரது டிப்பர் லாரியை சொரையப்பட்டு கிராமத்தை சேர்ந்த காத்தான் மகன் கமலஹாசன்(வயது 30) என்பவர் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கமலஹாசன் லாரியை திருக்கோவிலூர்-செவலைரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
பின்னர் நேற்று அதிகாலை காலை 5 மணி அளவில் குணசேகரன் சென்று பார்த்தபாது அங்கே லாரியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கமலஹாசனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் இரவில் லாரியை அங்கே நிறுத்திவிட்டு சென்றதாக கூறினார். இதனால் லாரியை யாரோ மர்ம நபர்கள் கடத்திசென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியது
பின்னர் இதுகுறித்து குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன லாரியை தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு மேலானந்தல் பகுதியில் உள்ள சாலையோர கொட்டகைக்குள் டிப்பர் லாரி ஒன்று புகுந்து நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அந்த லாரி குணசேகரனுக்கு சொந்தமான லாரி என்பதும், அதை மர்ம நபர்கள் கடத்திசென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
2 வாலிபர்கள் கைது
இதையடுத்து லாரியை கடத்தி சென்ற மயிலாடுதுறை பாலக்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்தி(20), பட்டவர்த்தி பகுதியை சேர்ந்த கைப்பிள்ளை மகன் சங்கர்(32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து திருக்கோவிலூா் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.