ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி தற்கொலை


ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி தற்கொலை
x

ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முக்கிய குற்றவாளி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீட்டுக்கு வந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீத வட்டி வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்தது. இதை நம்பி ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் சொன்னபடி வாடிக்கையாளர்களுக்கு வட்டித்தொகையை வழங்காமல் மோசடி செய்தது. இவ்வாறு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.800 கோடி வரை மோசடி செய்தது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான நேரு (வயது 49) உள்பட சிலரை கைது செய்தனர்.

கைதான முக்கிய குற்றவாளியான நேரு, சென்னை வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவில் வசித்து வந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த 14-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று முன்தினம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வீட்டுக்கு வந்த நேரு, இரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், நேரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர், கடுமையான மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story