மேளக் கலைஞரை தாக்கியவர் கைது
நெல்லை அருகே மேளக் கலைஞரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
நெல்லை அருகே பேட்டை கடசல் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 48). அதே பகுதி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (30). மேளவாத்திய கலைஞர்கள். ராதாபுரம் கோவிலில் விழாவில் நடந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் அருணாச்சலம் வீட்டிற்குச் சென்ற ராஜதுரை உள்பட 3 பேர் வீட்டில் இருந்த அருணாச்சலத்தின் தாயார் இசக்கி அம்மாளிடம் தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று அருணாச்சலம், அவரது நண்பர் வரதராஜன் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜதுரையிடம் தட்டி கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றவே ராஜதுரை, அவரது நண்பர்கள் உள்பட 3 பேர் சேர்ந்து அருணாச்சலத்தை செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்த அவர், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தார். தலைமறைவான மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.