தொழில் அதிபரின் காரை தீவைத்த மெக்கானிக் கைது


தொழில் அதிபரின் காரை தீவைத்த மெக்கானிக் கைது
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காரை பழுது பார்த்த போது பாக்கி வைத்த தொகையை கொடுக்காததால் ஆத்திரத்தில் தொழில் அதிபரின் காரை தீவைத்து எரித்து விட்டு, வெளிநாடு தப்ப முயன்ற மெக்கானிக்கை மும்பையில் போலீசார் மடக்கி பிடித்தனர்

கோயம்புத்தூர்

ரத்தினபுரி, செப்

கோவையில் காரை பழுது பார்த்த போது பாக்கி வைத்த தொகையை கொடுக்காததால் ஆத்திரத்தில் தொழில் அதிபரின் காரை தீவைத்து எரித்து விட்டு, வெளிநாடு தப்ப முயன்ற மெக்கானிக்கை மும்பையில் போலீசார் மடக்கி பிடித்தனர்

காருக்கு தீவைப்பு

கோவை ரத்தினபுரி நேரு வீதியில் உள்ள ஒரு பள்ளி அருகே நிறுத்தி வைத்து இருந்த ஒரு கார் கடந்த 2-ந் தேதி அதிகாலை தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனே தீயணைப்பு நிலையம் மற்றும் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுதொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த கார் அதே பகுதியில் உள்ள பெரியார் வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 47) என்பவருக்கு சொந்தமானது என்பதும், இவர் கவுண்டம்பாளையத்தில் சோலார் பேனல் நிறுவனம் வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 1-ந் தேதி இரவு இவர் சத்தியமங்கலம் சென்றுவிட்டு வந்து காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு சென்றதும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் மர்ம ஆசாமி அந்த காருக்கு தீ வைத்துள்ளார்.

மும்பையில் கைது

இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த ஆசாமி யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ஆசாமி துடியலூர் பகுதியை சேர்ந்த கார்மெக்கானிக் பூபதி (28) என்பதும், இவர் ஆனந்தகுமாரின் காருக்கு (பழுது பார்த்தல்) சர்வீஸ் செய்துள்ளார்.

அப்போது பேசிய தொகையான ரூ.25 ஆயிரத்தில் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஆனந்தகுமார் கொடுத்துள்ளார். பாக்கி தொகையை கடந்த 1 ஆண்டாக பூபதிக்கு கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். பல முறை கேட்டும் அவர் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த பூபதி ஆனந்தகுமாரின் காருக்கு தீ வைத்து எரித்து விட்டு சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை சப்-இன்ஸ்பெக்டர் அஜித் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.அப்போது அவர் குவைத் நாட்டிற்கு செல்வதற்காக மும்பை விமானநிலையத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மும்பை விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் அஜித் தனி ஒருவராக மும்பை விரைந்து சென்றார். பின்னர் அவர் மும்பை விமானநிலையத்தில் வைத்து ஏற்கனவே மற்றொரு வழக்கில் குற்றவாளியை பிடிக்க மும்பையில் இருந்த கோவை தனிப்படை போலீசாரின் உதவியுடன் பூபதியை மடக்கிப்பிடித்து கைதுசெய்தார்.

----------------------------


Related Tags :
Next Story