ரவுடி துண்டு துண்டாக வெட்டி கொடூரக்கொலை - போலீசார் என கூறி அழைத்து சென்ற கும்பல் வெறிச்செயல்...!
தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கும்பல் ரவுடியை விசாரணைக்கு என்று கூறி அழைத்து சென்றுள்ளனர்.
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக இருப்பதாக வானவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
கொலை செய்யப்பட்ட நபர் இராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சரத்குமார் என்பது தெரியவந்தது.
இவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவுகள் உள்ள நிலையில் கடந்த மாதம் சரத்குமாரை கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இதில் தப்பித்த சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சரத்குமார் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு திருவள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும் விசாரணைக்கு தங்களை அழைத்து வர சொன்னதாக கூறி சரத்குமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாணாவரம் புதூர் மலைமேடு அருகே உள்ள சுடுகாடு ஓடையில் சரத்குமார் ஒரு கை, இரண்டு கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன், ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.