நீர்வீழ்ச்சியில் தத்தளித்த மகனை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தாய்


நீர்வீழ்ச்சியில் தத்தளித்த மகனை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தாய்
x

நீர்வீழ்ச்சியில் தத்தளித்த மகனை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மாணிக்கவள்ளி(வயது 30). இவரது மகன்கள் கிஷோர்(13), கிரண்குமார் (12). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் கிஷோர் 8-ம் வகுப்பும், கிரண்குமார் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கல்வராயன்மலையில் பெய்த மழையால் அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் மாணிக்கவள்ளி தனது மகன்களுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றார். அப்போது அவர், தனது தோழியான பாக்கியராஜ் மனைவி ராதிகாவையும்(29) அழைத்துச் சென்றிருந்தார்.

மகனை காப்பாற்றிய தாய்

நீர்வீழ்ச்சியில் இறங்கி 4 பேரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கிரண்குமார், ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணிக்கவள்ளி, துரிதமாக செயல்பட்டு தனது மகனை காப்பாற்றி, பாறையில் நின்றிருந்த ராதிகாவிடம் கொடுத்தார். அடுத்த சில நொடிகளில் நீர்வீழ்ச்சியில் இருந்து வந்த தண்ணீர், மாணிக்கவள்ளியை இழுத்துச் சென்றது. ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார். உடனே ராதிகா தண்ணீரில் குதித்து ராதிகாவை தேடிப்பார்த்தும், கிடைக்கவில்லை.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் மாணிக்கவள்ளி பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story