தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்-நவாஸ்கனி எம்.பி கோரிக்கை


தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்-நவாஸ்கனி எம்.பி கோரிக்கை
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஏமாற்றம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கூறியதாவது:-

இந்த நிதியாண்டிற்கான பொது வரவு செலவு திட்டத்தில் பேச அனுமதித்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் போது ஒரு பெரும் வளர்ச்சி பெரும் சாதனை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். மதுரையில் தந்த எய்ம்ஸ் மருத்துவமனையை போல வெற்றிடமாக மட்டுமே உள்ளது என்பதை பதிவு செய்கிறேன். இந்த நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்துகிற அறிக்கையாகவே பார்க்கமுடிகிறது.

இந்த சிறுபான்மை மக்களை தொடர்ந்து வஞ்சிக்கக்கூடிய அரசு என்பதை வழக்கம்போல இந்த பட்ஜெட்டிலும் நிரூபித்து விட்டது. பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொருளாதார ஆய்வு அறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது, அது மட்டுமல்ல ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு குறைந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நிதியமைச்சர் எப்படி 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியும் என்று தெரியவில்லை.

150 நாட்களாக..

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் இன்று நாட்டில் அதிகமான வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் மேம்பாட்டிற்கு 15 சதவீதத்திற்கு மேல் ஜி.எஸ்.டி. வரி கூடாது என்று தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்ற மறுக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கி பிடிக்கும் அளவில் கொண்டு வரப்பட்ட திட்டம். இந்த திட்டத்தில் வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப்கான நிதி சுமார் ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் தேசிய கல்வி ஆராய்ச்சிஉதவித்தொகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மாணவர்கள் ஆராய்ச்சி கல்வி கற்பதை தடுக்க கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story