2-ம் போக நெற்பயிர் அறுவடைக்கு தயார்


2-ம் போக நெற்பயிர் அறுவடைக்கு தயார்
x

வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வைகை தண்ணீரை பயன்படுத்தி 2-ம் போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்


வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வைகை தண்ணீரை பயன்படுத்தி 2-ம் போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வறண்ட மாவட்டம்

தமிழகத்திலேயே தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்றுதான் அழைக்கப்பட்டு வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தில் மழை பெய்வது என்பது மிக மிக குறைவுதான். அது மட்டுமல்லாமல் இங்கு குடிதண்ணீர் பிரச்சினை என்பது தலையாய பிரச்சினையாக உள்ளதால் வறண்ட மாவட்டம் என்று அழைப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

அதுபோல் ஆண்டுதோறும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்தே விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குகின்றனர். அதிலும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் ஏர் உழுதும் விதைநெல்களை தூவி விவசாய பணிகளையும் தொடங்கி விடுகின்றனர். வடகிழக்கு பருவமழை சீசனில் மழை பெய்ய தொடங்கியதும் இந்த விவசாய நிலங்களில் தூவப்பட்ட விதை நெல் நெற்பயிர்களாக வளர தொடங்கி விடுகின்றன. இவ்வாறு வளர்ந்த நெற் பயிர்களை ஜனவரி மாதத்தில் இருந்து அறுவடை செய்யும் பணியிலும் விவசாயிகள் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சம்பா, சோதி மட்டை, ஆர்.என்.ஆர். போன்ற ரக நெல் விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகை தண்ணீர்

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் அதிக அளவு மழையே பெய்யாததால் நெல் விவசாயம் அதிகமாகவே பாதிக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை உள்ளிட்ட தாலுகாவுக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விளைச்சல் இல்லாமல் கருகிப் போய்விட்டன.

பருவ மழை சீசனில் மழை பெய்யாததால் கண்மாய்களிலும் தண்ணீர் இல்லாததால் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மதுரை வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து பரமக்குடி மற்றும் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் உள்ள கண்மாயிலும் வைகை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சேமித்து வைக்கப்பட்டது. இவ்வாறு பல கண்மாய்களில் சேமித்து வைக்கப்பட்ட வைகை தண்ணீரை பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் இந்த ஆண்டு முதல் போக நெல் விவசாயம் நடைபெற்றது.

இதனிடையே வைகை அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம், போகலூர், பரமக்குடி உள்ளிட்ட யூனியன்களை சுற்றி உள்ள பல கிராமங்களிலும் கண்மாய்களில் தற்போதும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

2-ம் போக நெல் சாகுபடி

குறிப்பாக போகலூர் யூனியனுக்கு உட்பட்ட சத்திரக்குடி எட்டிவயல், தீயனூர் மற்றும் திருஉத்திரகோசமங்கை விலக்கு, நல்லாங்குடி, களக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களில் வைகை தண்ணீர் ஓரளவு இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி இந்த கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு இரண்டாம் போக நெல் சாகுபடிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்கள்.

தற்போது சத்திரக்குடி, போகலூர், எட்டிவயல், தீயனூர், நல்லாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் 2-ம் போக நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. அதுபோல் சில கிராமங்களில் நெற் பயிர்களை அறுவடை செய்யும் பணியிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை மும்முரம்

இது குறித்து எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மெய்யன் (வயது 60) கூறும்போது, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழை பெய்யவில்லை. ஆனால் மதுரை வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் எட்டிவயல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கும் கொண்டு வந்து சேமித்து வைக்கப்பட்டது. அந்த தண்ணீரை பயன்படுத்தி இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடியில் ஈடுபட்டோம். அதனால் நெல் விளைச்சல் நன்றாகவே இருந்தது.

66 கிலோ எடை கொண்ட சோதி மட்டை ரக நெல் மூடை ரூ.1400-க்கு விலை போனது. 66 கிலோ எடை கொண்ட சம்பா ரக நெல்மூடை ரூ.1050-க்கு விலை போனது. எட்டி வயல் கண்மாயில் தற்போது வரை வைகை தண்ணீர் இருப்பு உள்ளதால் அந்த தண்ணீரை பயன்படுத்தியே இந்த ஆண்டு 2-ம் போக நெல் சாகுபடியை தொடங்கினோம். தற்போது பல கிராமங்களிலும் வளர்ந்து நிற்கும் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் முதல் முறையாக 2-ம் போக நெல் சாகுபடி செய்கின்றோம். தற்போது நெல் நன்றாக விளைச்சல் இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சி

இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி குமுதப்பிரியா கூறியதாவது:-

எங்கள் கிராமத்தின் கண்மாயில் வைகை தண்ணீர் இருப்பு உள்ளதால் அதை பயன்படுத்தி முதல்முறையாக இந்த ஆண்டு தான் 2-ம் போக நெல்சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஆண்டு பருவ மழை சீசனில் மழை பெய்யவில்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி விளைச்சல் நன்றாக இருந்தது. தற்போது அதே வைகை தண்ணீரை பயன்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி செய்துள்ளோம். ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறுவடை செய்யும் தருவாயில் நெற்பயிர் வளர்ந்து நிற்கின்றன. இதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story