மகள் கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக தேடிய பெற்றோர்.. அடுத்து நடந்த ஆச்சரியம்


மகள் கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக தேடிய பெற்றோர்.. அடுத்து நடந்த ஆச்சரியம்
x

கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். மாணவி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். எதற்காக வெளியே செல்லாமல் வீட்டிற்குள் இருக்கிறாய்? என பெற்றோர், மாணவியை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

நீண்டநேரம் ஆகியும் மீண்டும் அவள் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். மாணவி தலையில் வைத்திருந்த பூ, அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவி கிணற்றில் விழுந்திருக்கலாம் என நினைத்து தேட முயன்றனர். கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அங்கு தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து காரியாபட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறப்பு நிலைய அலுவலர் சசிகுமார் தலைமையிலான குழுவினர் கிணற்றில் இறங்கி சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர். சுமார் 5 மணி நேரம் அந்த சிறுமியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அந்த மாணவி, உறவினர் ஒருவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமியை பார்த்த உடன் பெற்றோரும், தீயணைப்பு துறையினரும் பெரு மூச்சு விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story