மத்திய அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்-முத்தரசன் பேச்சு


மத்திய அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்-முத்தரசன் பேச்சு
x

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

தென்காசி

சிவகிரி:

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

மே தின பொதுக்கூட்டம்

சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் ராஜகோபால், துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் இசக்கி துரை, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விலைவாசி உயர்வு

கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது:- நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. மருந்து, மாத்திரைகளின் விலையும் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.

தற்போது விறகு அடுப்பை நாம் மறந்து விட்டோம். கியாஸ் சிலிண்டரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது, கியாஸ் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது. இதனை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறதே தவிர மக்களுக்கு வருமானத்தை அதிகரிக்க வழிஇல்லை.

மக்கள் குரல் கொடுக்க வேண்டும்

கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றனர். அவர்கள் நினைத்தால் இதுவரை 20 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். இதுதான் மத்திய அரசின் சாதனையாக உள்ளது.

மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் தனி மெஜாரிட்டி உள்ள காரணத்தால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் இஷ்டம் போல் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. ஆகவே மத்திய அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story