பெண்னை தாக்கியவர் கைது

தியாகதுருகம் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அமுதா (வயது 42). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (56) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் அமுதாவின் நிலத்தில் இருந்த பருத்தி செடியை, அருணாச்சலம் டிராக்டர் மூலம் அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற அமுதா டிராக்டரில் இருந்த சாவியை எடுத்ததோடு, உதவிக்காக தனது உறவினர் பாலகிருஷ்ணன் என்பவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். மேலும் ஏன் பயிர்களை அழித்தீர்கள் என அருணாச்சலத்திடம் அமுதா தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அருணாச்சலம் டிராக்டரில் இருந்து கட்டையை எடுத்து பாலகிருஷ்ணனை தாக்க முயன்றார். அதனை அமுதா தடுக்க முயன்றபோது, அவரது தலையில் கட்டை பட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அமுதா சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






