சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது
விழுப்புரம் அருகே சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புற பகுதியில் சுமார் 1½ அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன கருடாழ்வார் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று முன்தினம் யாரோ சேதப்படுத்தி விட்டனர்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வி.அகரம் காலனி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் ஆனந்தராஜ் (வயது 28) என்ற செங்கல் சூளை தொழிலாளி, சில மாதங்களுக்கு முன்பு ஒருவரின் உடல்நிலை குணமடைய வேண்டுமென வேண்டியிருந்ததாகவும், அந்த வேண்டுதல் நிறைவேறாததால் கோபத்தில், கருடாழ்வாரின் சிலையை தள்ளிவிட்டு சேதப்படுத்தியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.