தனியார் நிதி நிறுவன அலுவலக பூட்டை உடைத்து போலீசார் சோதனை
திண்டிவனம் பகுதியில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் தனியார் நிதி நிறுவன அலுவலக பூட்டை உடைத்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான வெற்று பத்திரம், காசோலைகள் சிக்கின.
திண்டிவனம்
கந்துவட்டி வழக்கு
திண்டிவனம் அருகே உள்ள கிராண்டிபுரத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் கவிதாசன்(வயது 31). மாட்டுப்பண்ணை தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஊரல் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் மகன் ரவி என்பவரிடம் 6 பைசா வட்டிக்கு ரூ.7 லட்சம் கடன் வாங்கினார்.
இதற்காக வெற்று காசோலைகள் மற்றும் பிராமிசரி நோட்டுகளை ரவி மிரட்டி பெற்றுக்கொண்டார் மேற்படி தொகைக்கு மாத வட்டியாக ரூ.42 ஆயிரத்தை கவிதாசன் செலுத்தி வந்தார். அசலில் ரூ.6 லட்சம் செலுத்திய நிலையில் மீதி ரூ.1 லட்சம் கடன் பாக்கி இருந்தது. ஆனால் ரவி அசலும் வட்டியுமாக ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கவிதாசன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோர்ட்டு உத்தரவு
மேலும் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ரவிக்கு போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் அவர் தலைமறைவானார். இதையடுத்து பூட்டிக்கிடந்த அவரது நிதி நிறுவன அலுவலகத்தை சோதனை செய்ய திண்டிவனம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர். இதை ஏற்று திண்டிவனம் குற்றவியல் நீதிமன்ற எண்-1(பொறுப்பு) மாஜிஸ்திரேட் மாலதி உத்தரவின் பேரில் மேற்படி நிதி நிறுவனத்தின் அலுவலக பூட்டை உடைத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்துக்கு சீல்
காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் போலீசார் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
இந்த சோதனையில் கையெழுத்துடன் உள்ள ஏராளமான வெற்றுபத்திரங்கள், கையெழுத்துடன் உள்ள வெற்று பிராமிசரி நோட்டுகள் மற்றும் காசோலைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதனால் ரவி, மேலும் பலரிடம் கந்து வட்டி கேட்டு பணம் வசூல் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
இதுபோன்று கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.