தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த போலீசார் விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்


தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த போலீசார் விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

விருத்தாசலத்தில் தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு போலீசார் புதிய வீடு கட்டிக்கொடுத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி.

இவர்களுக்கு சந்தியா, செவ்வந்தி என்ற 2 மகள்களும், சரண் குமார், நிதீஷ், நிகாஷ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

சக்திவேல், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார். இதனால் முத்துலட்சுமி, தனது கணவரை இழந்து 5 குழந்தைகளுடன் ஆதரவின்றி தவித்து வந்தார்.

மேலும் தனது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அப்போது முத்துலட்சுமி தனது 5 குழந்தைகளுடன், பாழடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.

புதிய கான்கிரீட் வீடு

இதையடுத்து விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், முத்துலட்சுமியின் 5 குழந்தைகளும் படிப்பதற்கு தேவையான உதவிகளை தன்னுடைய சொந்த செலவில் செய்வதுடன், அந்த குடும்பத்திற்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுப்பது என முடிவு செய்தார்.

மேலும் உதவும் காவல் இதயங்கள் என்ற வாட்ஸ் அப் குரூப் மூலமாக, பலரை ஒருங்கிணைத்து வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்டு, ஜல்லி, மணல் போன்ற பொருட்களை வாங்கி முத்துலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தில் புதிய வீட்டை கட்டி கொடுத்தார். மேலும் அந்த வீட்டிற்கு கருணை இல்லம் என பெயர் சூட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். அந்த வீட்டிற்கு உரிய சாவியை முத்துலட்சுமி குடும்பத்தினரிடம் வழங்கினார். மேலும் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுப்பதற்கு பெரும் பங்கு வகித்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார். முன்னதாக போலீசார், சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

நெகிழ்ச்சி

விழாவில் இன்ஸ்பெக்டர்கள் பெண்ணாடம் குமார், மங்கலம்பேட்டை சந்திரசேகர், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் விருத்தாசலம் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் அய்யனார், கம்மாபுரம் மாணிக்கராஜா, மங்கலம்பேட்டை தேவி, கருவேப்பிலங்குறிச்சி சிவராமன், ராமலிங்கம், பெண்ணாடம் பிரகஸ்பதி, ஆலடி பரந்தாமன், விருத்தாசலம் ரவிக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் இளங்கோவன், காந்தி, ஜெயக்குமார், தலைமை காவலர்கள் சரவணன், ஜனார்த்தனன், பாஸ்கர், என்ஜினீயர் மணிகண்டன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் நன்றி கூறினார்.

தொழிலாளியை இழந்து ஆதரவின்றி தவித்த குடும்பத்திற்கு போலீசார் புதிய வீடு கட்டி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story