மின்சார ரெயிலில் தவித்த சிறுவனை மீட்ட போலீசார்


மின்சார ரெயிலில் தவித்த சிறுவனை மீட்ட போலீசார்
x

மின்சார ரெயிலில் தவித்த சிறுவனை மீட்ட போலீசார் உடனடியாக தாயிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக கண்டிகையை சேர்ந்த கிரிஜா என்பவர் தனது 6 வயது மகன் ஜீவாவுடன் ரெயில் நிலையம் வந்தார். அப்போது செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் நடைமேடைக்கு வந்ததும் கிரிஜா முதலில் தனது மகனை ரெயிலில் ஏற்றிவிட்டு, பின்னர் அவர் ஏற முயன்றார். ஆனால் கூட்டநெரிசல் காரணமாக கிரிஜாவால் மின்சார ரெயிலில் ஏறமுடியவில்லை. அதற்குள் மின்சார ரெயிலும் செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றது. அதில் தனியாக ஏறிய அவருடைய மகன் ஜீவா பரிதவித்தான். பெருங்களத்தூர் ரெயில் நிலைய நடைமேடையில் நின்றபடி கிரிஜா கதறி அழுதார்.

உடனே அங்கிருந்த பயணிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் முருகலிங்கம் ஆகியோர் மின்சார ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், மின்சார ரெயிலில் பரிதவித்த சிறுவன் ஜீவாவை மீட்டு வண்டலூர் ரெயில் நிலையத்தில் இறக்கி கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் அழைத்து வந்தார்.

அங்கு நடைமேடையில் கண்ணீருடன் நின்ற கிரிஜாவிடம் மகனை ஒப்படைத்தார். கிரிஜா கண்ணீர் மல்க கதறி அழுதபடி மகனை கட்டி அணைத்துக்கொண்டார். ரெயிலில் பரிதவித்த சிறுவனை மீட்டு உடனடியாக தாயிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசாரை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story