தீரன் பட பாணியில் நடந்த கொடூர கொலைகள்... ராஜஸ்தான் சென்று கைது செய்த போலீஸ்
ஜாமீனில் சென்று தலைமறைவாகிய கொலை, கொள்ளைக் குற்றவாளி ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் சவுத்ரி (51) என்பவரின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கடந்த 2021 ஜனவரி 27-ஆம் தேதி மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, 12.5 கிலோ நகை, கார் மற்றும் ரூ.6.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஹிபால்சிங் என்பவர் அன்றைய தினமே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தப்பியோடிய மனீஷ், ரமேஷ்பட்டேல் மற்றும் வழக்கில் தொடர்புடைய கும்பகோணத்தை சேர்ந்த கருணாகராம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மனீஷ் கோர்ட்டில் ஆஜராகாமல் ராஜஸ்தானில் பதுங்கியிருந்தார். இதையடுத்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் விமானம் மூலம் ராஜஸ்தான் சென்று, அங்கு பதுங்கி இருந்த மனீஷை ராஜஸ்தான் போலீஸார் உதவியுடன் கைது செய்து அழைத்துவந்து, மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர் நாகை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.