ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது


ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வங்கிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.

விழுப்புரம்

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதோடு ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந் தேதி முதல் அனைத்து வங்கி கிளைகளிலும் அந்த பணத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பொதுமக்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் 4 மாத காலம் அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசத்தையும் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை நேற்று முதல் அனைத்து வங்கிகளிலும் தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் சிரமமின்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வங்கிகளில் ஏற்பாடு

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றவும் மற்றும் டெபாசிட் செய்யவும் வருபவர்களின் வசதிக்காக தனியாக இடவசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் யாரேனும் வந்தால் அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளிக்கவும் வங்கி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதுபோல் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்கு ஏற்ப வங்கி ஊழியர்கள், 500 ரூபாய் நோட்டுகளையும் அதிகளவில் இருப்பு வைத்திருந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு பெரும்பாலான வியாபாரிகள், பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டை பார்த்தே பல மாதங்கள் ஆவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

வெறிச்சோடி காணப்பட்டது

இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. பல வங்கிகளில், தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டபோதிலும் அப்பகுதியில் மக்கள் வருகையின்றி வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒன்றிரண்டு பேர் மட்டுமே வங்கிகளுக்கு வந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றினர். மேலும் டெபாசிட் செய்து விட்டு சென்றதை காண முடிந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி நேற்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி ராஜாநகர் மற்றும் கச்சேரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான தனி கவுண்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் ரூ.2000 நோட்டுகள் மாற்றுவதற்கு ஆட்கள் யாரும் வரவில்லை. ஒரு சிலர் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ரூ.2000 நோட்டுகளை மாற்றி சென்றனர். சிலர் தங்கள் வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்தனர்.

இது பற்றி வங்கி ஊழியர் ஒருவர் கூறும்போது, வங்கியில் வழக்கம் போல் உள்ள வாடிக்கையாளர் கூட்டம் தான் நேற்றும் காணப்பட்டது. ரூ.2000 நோட்டுகளை மாற்றி கொள்வதற்காக சுமார் 50 பேர் வந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ரூ.2000 நோட்டை தங்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்தனர். மேலும் சிலர் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்யும் சென்றனர். ரூ.10000 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை ரூ.2000 நோட்டுகளை எடுத்து வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிகளில் இதே நிலைதான் இருந்தது என்றார்.


Next Story