மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து அரசு டாக்டர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்


மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து அரசு டாக்டர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 13 Oct 2023 2:00 AM IST (Updated: 13 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து, அரசு டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மதுரை

மாநகராட்சி அலுவலர்

மதுரை வண்டியூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக, கடந்த 29-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பின்னர் அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மதுரை மாநகராட்சியின் சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திக்கு வந்து அங்குள்ள டாக்டர்களிடம் அத்துமீறி, அங்குள்ள ஆவணங்களை திருத்தி உள்ளார். இதனால், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் 11 நாட்களாக அறுவைச்சிகிச்சைகள் புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், குடும்பநல அறுவை சிகிச்சை புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே மதுரை அரசு டாக்டர்களின் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்களின் ஆதரவு தெரிவித்து அவர்களும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில போராட்டங்களையும் அறிவித்திருந்தனர்.

போராட்டம் வாபஸ்

இந்த நிலையில் போராட்டம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அளித்த வாக்குறுதியை ஏற்று, இதுவரை நடத்தி வந்த அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் பேச்சுவார்த்தையில் மகப்பேறு சிகிச்சை மற்றும் கர்ப்பிணிகள் உயிரிழப்பு தணிக்கை தொடர்பாகவும், மகப்பேறு சிகிச்சை மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிவதற்கான குழு நியமனம் செய்யப்பட்டு அந்தக்குழு டாக்டர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் சங்கத்திடம் பல்வேறு கருத்துகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 11 நாட்களாக மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் அரசு டாக்டர்களிடையே நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.


Related Tags :
Next Story