தியாகராய நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆகாய நடைமேம்பாலத்துக்கு பொதுமக்கள், பயணிகள் வரவேற்பு


தியாகராய நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆகாய நடைமேம்பாலத்துக்கு பொதுமக்கள், பயணிகள் வரவேற்பு
x

தியாகராய நகரில் அமைந்துள்ள ஆகாய நடைமேம்பாலத்துக்கு பொதுமக்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் மிகவும் பரபரப்பான வணிக தளங்கள் அமைந்துள்ள பகுதி தியாகராய நகர் ஆகும். சென்னை மட்டுமல்லாது சென்னை நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பொருட்களை வாங்க பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் இருமடங்காக காணப்படும். எனவே, தியாகராய நகர் பகுதியில் நெரிசலை குறைக்க தியாகராயநகர் பஸ் நிலையத்தில் இருந்து மாம்பலம் ரெயில் நிலையம் வரையில் மக்கள் பயணிக்க ரூ.28½ கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த ஆகாய நடைமேம்பாலத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த ஆகாய நடைமேம்பாலம் 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் அமைக்கப்பட்டது. குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பாலத்துக்கு பொதுமக்களும், ரெயில் பயணிகளும், பெண்களும் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரியை சேர்ந்த காமாட்சி கூறுகையில், 'கூடுவாஞ்சேரியில் இருந்து தினமும் மாம்பலம் ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ரங்கநாதன் சாலை வழியாக தியாகராய நகர் பஸ் நிலையத்துக்கு செல்வேன். 30 நிமிடங்களாவது ஆகிவிடும். மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், இப்போது இந்த புதிய ஆகாய நடை மேம்பாலம் வரப்பிரசாதமாக இருக்கிறது. தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து மாம்பலம் ரெயில் நிலையத்துக்கு 10 நிமிடத்தில் சென்றுவிடுகிறேன். காற்றோட்ட வசதி உள்ளது. மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தரை வழுவழுப்பாக இருக்கிறது. நடந்து செல்ல சிரமமாக உள்ளது. மழை காலங்களில் இதனால் வழுக்கி கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த தரையை மட்டும் மாற்றித்தர வேண்டும்' என்றார்.

நடைமேம்பாலத்தின் காவலாளி செல்வம் கூறுகையில், 'நேற்று இரவு சிலர் தூங்குவதற்காக நடைமேம்பாலத்தின் மேலே ஏறி வந்துள்ளார்கள். அவர்களை உடனடியாக வெளியேற்றிவிட்டோம். ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். புதிதாக வரும் நபர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறோம்' என்றார்.

ஆகாய நடைமேம்பாலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 'பாதுகாப்பு பணிக்காக 4 காவலாளிகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். பகலில் 2 பேரும், இரவில் 2 பேரும் இப்பணியில் ஈடுபடுவார்கள். அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும். மேம்பாலத்தின் மேலே வியாபாரம் செய்யக்கூடாது, தூங்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.


Next Story