பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் மனு

சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பால் பவுடர் வழங்கவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி
சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பால் பவுடர் வழங்கவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
கலப்பு தீவனம்
தமிழ்நாடு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் அரசால் உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் தற்போது கறவை மாடுகளுக்கு தேவையான உலர் மற்றும் அடர் தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் போன்றவை மிகவும் உயர்ந்து விட்டது. தற்போது ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகவில்லை. மேலும் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.45 வரை வழங்குகின்றனர்.
எனவே தமிழக முதல்-அமைச்சர் பரிசீலித்து பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.12 வீதம் உயர்த்தி உடனடியாக வழங்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். கடந்த ஒராண்டாக ஒன்றியங்களின் கலப்பு தீவன மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கலப்பு தீவனம் 50 கிலோ மூட்டையை ரூ.1,070-க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது.
கமிட்டி அமைக்க வேண்டும்
ஆவின் ஒன்றியங்களில் கடந்த காலங்களில் லாபத்தில் இருந்து உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்ட ஒன்றியம் மட்டும் ரூ.55 கோடி வரை அந்த 7 ஆண்டுகளில் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் வழங்கி உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையினை உயர்த்தி கொடுத்தாலும் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தொடர்ந்து பால் ஊற்றினார்கள். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்யும் போது தகுதி அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களின் நேரடி வாரிசுகளுக்கு 50 சதவீதமும், கிராம சங்க பணியாளர்களின் வாரிசுகளுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கி பணி நியமனம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சத்தான ஆவின் பால் பவுடர் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நேரடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைத்தது போன்று கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.