விநாயகர் சிலைகளுக்கு சீல் வச்சதுக்கு காரணம்.. மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி


விநாயகர் சிலைகளுக்கு சீல் வச்சதுக்கு காரணம்.. மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 16 Sep 2023 1:09 PM GMT (Updated: 16 Sep 2023 1:18 PM GMT)

கால்சியம் சல்பேட் எனும் மக்காத பொருள் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேற்று ரசாயன பொருள்கள் கலந்து செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து சீல் வைத்தார். இது குறித்து தவறான தகவல் பரவியதால் இன்று அவர் விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது,

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 11 ம் தேதி மற்றும் கரூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் 12 ம் தேதியும் ஒரு புகார் மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர்.இந்த மனுவில், நாங்கள் சாதாரண மண் கொண்டு விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம். ஆனால் சில நபர்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய பல ரசாயன பொருள்கள் கலவைகளை கொண்டு சிலைகளை உருவாக்குகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ,சுகாதாரத்துறை அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள் இணைந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தோம். இதில் ரசாயன பொருள்கள் கொண்டு செய்யப்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.இது குறித்து மூன்று நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். எனினும் தொடர்ந்து அவர்கள் சிலைகளை செய்து வந்தனர் . எனவே கால்சியம் சல்பேட் கொண்டு உருவாக்கப்பட்ட சுமார் 418 சிலைகள் கைப்பற்றி சீல் வைக்கப்பட்டது.

எனவே இது முழுவதும் சுற்று சூழல் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு தானே தவிர விநாயகர் சதுர்த்தி விழாவை நடக்கவிடாமல் செய்வதற்காக அல்ல. இது தவறாக பரப்பப்பட்ட வதந்தி. இந்த நடவடிக்கைக்காக மண்பாண்ட தொழிலார்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர், என அவர் கூறினார்.


Next Story