மின்சாரம் பாய்ந்து இறந்த ஆசிரியர் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


மின்சாரம் பாய்ந்து இறந்த ஆசிரியர் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x

மின்சாரம் பாய்ந்து இறந்த ஆசிரியர் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

முசிறி:

முற்றுகை

முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (33). தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி(25) என்ற மனைவியும், பவிஷ்னா(3) என்ற பெண் குழந்தையும், 1 வயதில் கார்த்திக்கிருஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ேநற்று முன்தினம் மாலை பெரியசாமி தனது தோட்டத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வழியில் அறுந்து விழுந்த மின் கம்பி அவர் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை ஜெம்புநாதபுரம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த பெரியசாமியின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்ததுடன் தமிழக அரசு பெரியசாமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். பட்டதாரியான அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா

அவர்களிடம் முசிறி கோட்டாட்சியர் ராஜன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கழக துணை சூப்பிரண்டும், முசிறி துணை சூப்பிரண்டுமான(பொறுப்பு) சுப்பையா, தாசில்தார் பாத்திமா சகாயராஜ், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், கதிரேசன், தா.பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், பெரியசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரேத பரிசோதனை கூடம் முன்பு அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் முசிறி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story