சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வீட்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது - போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வீட்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது - போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு
x

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 400 வீடுகள் வரை உள்ளது. மிகவும் பழமையான குடியிருப்பு என்பதால் இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை போலீஸ்காரர்கள் ரியாஸ்கான் மற்றும் கண்ணன் ஆகியோரின் வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. அங்கு வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதாலும், போலீசார் பணிக்கு சென்றதாலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை என குடியிருப்பில் வசிப்போர் தெரிவித்தனர். இதற்கிடையில், மேற்கூரை பெயர்ந்து விழுந்ததை அறிந்த போலீஸ் குடியிருப்பினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி ஒரே இடத்தில் கூடினர். இதையறிந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து பெயர்ந்து விழுந்த மேற்கூரையை விரைந்து சீரமைத்து கொடுக்க உத்தரவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story