ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிப்பணியிடங்கள்
ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும்.
சட்டமன்ற அறிவிப்பின்படி பணிவிதிகளை உடனடியாக வெளியிட வேண்டும். 100 நாள் திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீட்டு உச்ச வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
வேலைநிறுத்த போராட்டம்
கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்பட16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையொட்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.