போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்


போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்
x

திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.

திருவாரூர்

மாநாடு

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் சட்ட ஒழுங்கு, அரசின் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து மக்கள் நலனை மையமாக கொண்டு உரிய ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசியது குறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் 29 சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 5 மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. ஜாம்பன் ஓடை, இடும்பாவனம், கோவிந்தகுடி, பேரையூர் ஆகிய 4 இடங்களில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளன.முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் மக்கள் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியும், சட்ட ஒழுங்கினை நிலை நாட்டிடவும் பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தனிப்பிரிவு

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக வளைதளங்களை கண்காணிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற இணையதளங்களில் வரும் செய்திகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க பள்ளி, கல்லூரி பகுதிகளில் உள்ள கடைகளை கண்காணிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. போதை பொருட்களால் மாணவர்கள் சீரழிவதை தடுத்திட போலீஸ்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக 2,199 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பாக 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு போலீஸ் துறை மூலமாக 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,050 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.29 ரோந்து வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

50 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு வரப்படும் புகார்கள் உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 29 சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் திருவாரூர் தாலுகா மற்றும் மன்னார்குடி தாலுகா ஆகிய இரு போலீஸ் நிலையங்களின் எல்லைகள் பரந்து விரிந்து காணப்படுவதால், மக்கள் பிரச்சினை எளிதில் தீர்வு காண இந்த இரு போலீஸ் நிலையங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story