திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது - அமைச்சரின் நாசர் செயல் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்


திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது - அமைச்சரின் நாசர் செயல் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
x

திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது, அவ்வளவு செய்கிறார்கள் என அமைச்சர் நாசரின் செயல் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை,

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்துக்காக, திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலைஅருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனை திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் அமருவதற்காக, நாற்காலிகளை எடுத்து வருமாறு தொண்டர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நாற்காலிகள் எடுக்க சென்ற தொண்டர், ஒரே ஒரு நாற்காலியை அதுவும் மெதுவாகவும் எடுத்து வருவதை பார்த்து கோபமடைந்த அமைச்சர், அவரை ஒருமையில் பேசியபடி, அங்கிருந்த மண் குவியலில் ஒரு கல்லை எடுத்து அந்த தொண்டர் மீது வீசி எறிந்தார். இந்த வீடியோ காட்சி பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க தினத்தை முன்னிட்டு ராயுபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

"திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது. ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள், பொதுமக்களை அடிப்பவர்கள், உள்ளாட்சி பிரநிதிகளை அசிங்கப்படுத்துவர்கள் ஆகியோர்தான் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். கல் தூக்கி அடித்த அமைச்சரை இதுவரை பார்த்தது இல்லை. தமிழ்நாடு வெட்கித் தலை குனியும் ஜோக்கர் அரசு தான் தற்போது நடைபெற்று வருகிறது. திமுக கற்காலத்திற்கு சென்று விட்டது" என்று அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் புரட்சியின் முன் எதுவும் எடுபடாது. எத்தனை பேர் வந்தாலும் அதிமுக ஜெயிப்பது உறுதி. திமுகவின் பி டீம் என்று கமல்ஹாசனை கூறியது நிரூபிக்கப்பட்டு விட்டது என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு குறித்து ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story