வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவரை தலைமை ஆசிரியர் திட்டி தாக்கியதாக கூறிய புகாரை அடுத்து சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில்
அரசு ஆண்கள் பள்ளி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 460 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை இங்கு படித்து வரும் பிளஸ்-1 மாணவர் ஒருவர் அவரது தலைமுடியை வித்தியாசமான முறையில் வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்தார். இதை அறிந்த தலைமை ஆசிரியர் திருமுருகன் அந்த மாணவரை அழைத்தபோது அவர் அங்கும் இங்குமாக ஓடியதாக தெரிகிறது.
வகுப்பை புறக்கணித்து போராட்டம்
பின்னர் சில மாணவர்கள் உதவியுடன் பிளஸ்-1 மாணவரை பிடித்து வந்தனர். அவரை எச்சரித்த தலைமை ஆசிரியர் நாளை மாணவரின் ஊருக்கு வருவதாக கூறி அவரை கையால் 2 முறை அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி தன்னை திட்டியதாக பிளஸ்-1 மாணவர் புகார் கூறினார். இதை அறிந்த சக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தலைமையாசிரியர் அறையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து முதன்மை கல்வி அதிகாரி பழனி, மாவட்ட கல்வி அதிகாரி சங்கர், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், தாசில்தார் பிரகாஷ், காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் விரைந்து வந்து தலைமை ஆசிரியர் திருமுருகன் மற்றும் பிளஸ்-1 மாணவர் ஆகியோாிடம் விசாரணை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி பிரமுகர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது அல்லது இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.