'பழங்குடியின பெண்களை காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை' - வாச்சாத்தி வழக்கில் ஐகோர்ட்டு கருத்து


பழங்குடியின பெண்களை காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை - வாச்சாத்தி வழக்கில் ஐகோர்ட்டு கருத்து
x

வாச்சாத்தி வழக்கில் பழங்குடியின பெண்களை காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் மொத்தம் 250-க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளிடம் ரூ.5 லட்சம் வசூலித்து அரசின் ரூ.5 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ.10 லட்சத்தை பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீர்ப்பு வரும்போது 54 பேர் உயிருடன் இல்லாததால் மீதி இருக்கும் 215 பேருக்கும் தர்மபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நீதிபதி வேல்முருகன் உறுதி செய்தார்.

இதன் மூலம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள், வனத்துறையினர் உள்பட 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை பணத்தினாலோ, வேலைவாய்ப்பு வழங்குவதாலோ ஈடுகட்ட முடியாது. சந்தன மரக்கட்டைகளை தேட 18 பெண்களை அழைத்துச் சென்றபோது, பெண் காவலர் இருந்தும் அவரை அழைத்துச் செல்லவில்லை.

13 வயது சிறுமி, 8 மாத கர்ப்பிணி உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கின்றனர். காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாகவே 18 பெண்களும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கூறவில்லை.

வாச்சாத்தி பகுதியில் சில முக்கிய நபர்கள் சந்தன மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறையினர் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சந்தனமர கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியுடன் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். பழங்குடியின பெண்களை காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை. தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முயன்றது.

சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன."

இவ்வாறு நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story