மொத்த எண்ணிக்கை 11 ஆனது: அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றுமுன்தினம் நிலவரப்படி அண்ணா பல்கலைக்கழக கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 2 பேர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி பரிசோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






