ஓ.பன்னீர்செல்வத்தின் திருச்சி மாநாட்டால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை - பொன்னையன்


ஓ.பன்னீர்செல்வத்தின் திருச்சி மாநாட்டால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை - பொன்னையன்
x

ஓ.பன்னீர்செல்வத்தின் திருச்சி மாநாட்டால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பொன்னையன் கூறியுள்ளார்.

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி அளிக்கிறார். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து பேசுகையில், 'அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிவோடும், பொலிவோடும் இருப்பதாகவும், செல்லாக்காசாகி விட்ட சிலரால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும், 'ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் இணைந்து நடத்தும் திருச்சி மாநாட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்தாலும், மைய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவானவர்கள்தான் அதில் இடம்பெற்று இருப்பதால் உடனே முடிவு கிடைத்து விடாது', என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து பேசுகையில், 'மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் குடும்ப நாடகத்தை அங்கு நடத்தி மகிழ்வதாகவும், தி.மு.க.வுக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது என்றும், குடும்ப பற்று ஒன்றுதான் அதன் கொள்கை என்றும் காட்டமாக விமர்சித்து உள்ளார். கவர்னருக்கு எதிரான தீர்மானத்தில் அ.தி.மு.க. பங்கேற்காதது பற்றி பேசுகையில், 'அ.தி.மு.க.வுக்கு என்று தனி கொள்கை இருக்கிறது. தி.மு.க. கொண்டு வருவதை ஆதரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரசு ஒதுக்கிய பணத்தை செலவு செய்ய கவர்னருக்கு உரிமை உள்ளது. அதே வேளையில் ஆய்வுக்கு உட்பட்டதுதான். மேலும் அ.தி.மு.க., மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது' என்றும் கூறியுள்ளார்.

'பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம்' என்றும் கூறியுள்ளார்.

மேலும், அ.தி.மு.க.வின் எதிர்காலம்? மற்றும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி? தேசிய அரசியலில் மு.க.ஸ்டாலின் தாக்கத்தை எற்படுத்துவாரா? ராகுல்காந்தி மற்றும் பிரியங்காவின் எழுச்சியால் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதிப்பு ஏற்படுமா? உள்ளிட்ட நிகழச்சி தொகுப்பாளரின் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கும் பொன்னையன் பதில் அளித்துள்ளார்.


Next Story