ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 18.4 அடியாக உயர்வு


ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 18.4 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 17 Oct 2023 9:30 PM GMT (Updated: 17 Oct 2023 9:30 PM GMT)

திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 18.4 அடியாக உயர்ந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 18.4 அடியாக உயர்ந்தது.

காமராஜர் அணை

திண்டுக்கல் மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த காமராஜர் அணை, ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

குடகனாறு, கூழையாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் அணையில் தேக்கப்படுகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 23.5 அடி ஆகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. மேலும் தினமும் குடிநீர் எடுக்கப்படுவதால், காமராஜர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. கடந்த மாதம் 14 அடிக்கு கீழே நீர்மட்டம் சென்றுவிட்டது.

18.4 அடியாக உயர்வு

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டு, நீர்மட்டம் மளமளவென உயர்ந்த வண்ணம் உள்ளது.

அதன்படி நேற்றைய தினம் அணையின் நீர்மட்டம் 18.4 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதோடு, மழைப்பொழிவும் உள்ளது. எனவே காமராஜர் அணை விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி ஆணையர் ஆய்வு

இதற்கிடையே திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று காமராஜர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணையின் மறுகால் பகுதி, மதகு, அணைக்கு நீர்வரும் பகுதி, நீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகளை ஆணையர் பார்வையிட்டார்.

மேலும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story