கோமுகி அணையின் நீர் மட்டம் 30 அடியாக உயர்வு
கல்வராயன்மலை கோமுகி அணையின் நீர் மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது.
கச்சிராயப்பாளையம்
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கல்படை ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் நிலவரப்படி கோமுகி அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி நீர் வரத்து காணப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 25 அடியாக இருந்த கோமுகி அணையின் நீர் மட்டம் ஒரு வாரத்தில் 30 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் பிரச்சினை இருக்காது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.