கம்பத்தில் 3 மாதங்களுக்கு வாரச்சந்தை செயல்படாது; நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கம்பத்தில் 3 மாதங்களுக்கு வாரச்சந்தை செயல்படாது என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்பம் நகராட்சி கூட்டம், அதன் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணைத்தலைவர் சுனோதா செல்வக்குமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர். அப்போது, தெருக்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும், உழவர் சந்தையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், காந்திஜீ பூங்காவில் உள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், கம்பம் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பணிக்காக வாரச்சந்தையை தற்காலிமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வாரச்சந்தையை மூடினால் பொதுமக்கள் வருகை குறையும் வாய்ப்புள்ளது. எனவே மாற்று இடத்தை தேர்வு செய்து வாரச்சந்தையை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றார். மேலும் கம்பம் நகராட்சி வாரச்சந்தைக்கு புதிய கட்டிடங்கள் நவீன முறையில் கட்டப்படுகின்றன. இந்த கட்டுமான பணிகளால் விபத்து ஏற்படாத வகையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்பு நலன் கருதி 3 மாதங்களுக்கு வாரச்சந்தை செயல்படாது என்றும் கூறினார். பின்னர் அதற்கான தீர்மானம் உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பன்னீர், சுகாதார அலுவலர் அரசகுமார், நகரமைப்பு அலுவலர் சலீம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.