ஒச்சாண்டம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பணம் கொள்ளை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கோவில் பின்புறம்தான் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் கார்த்தி, சூரி ஆகியோர் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றனர். ஆனால் உண்டியலில் இருந்த சில்லறை காசுகளை அப்படியே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார் அங்கு ெசன்று விசாரணை நடத்தினர். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உத்தப்பநாயக்கணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.