லாரிகளில் மசாலா பாக்கெட்டுகள் திருட்டு
நாமக்கல் வழியாக செல்லும் லாரிகளில் மசாலா பாக்கெட்டுகள் திருட்டு போனதாக ஈரோடு லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் நேற்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலியை சந்தித்து, லாரிகளில் சமீபகாலமாக நடைபெறும் மசாலா பாக்கெட் திருட்டு குறித்து முறையிட்டு, மாநில சம்மேளனம் மூலம் போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஈரோட்டில் இருந்து மசாலா பாக்கெட்டுகள் லோடு ஏற்றி கொண்டு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்ற 12 லாரிகளில் இருந்து கடந்த 20 நாட்களில் மட்டும் ரூ.15 லட்சம் மதிப்பிலான மசாலா பாக்கெட்டுகள் திருடப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் லாரியின் தார்ப்பாயை கிழித்து இந்த திருட்டுகள் நடந்து உள்ளன. இந்த திருட்டு அனைத்தும் நாமக்கல், திருச்சி மாவட்ட எல்லைகளில் தான் நடந்து உள்ளது.
இது பற்றி திருச்சி மற்றும் கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ஈரோட்டில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. போலீஸ் நிலையங்களில் புகாரை பதிவு செய்து எப்.ஐ.ஆர். போட்டு கொடுத்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து நஷ்டஈடு பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.