திருத்தணியில் கடை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.50 ஆயிரம் நூதன திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு


திருத்தணியில் கடை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.50 ஆயிரம் நூதன திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x

திருத்தணியில் சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ரூ.50 ஆயிரத்தை நூதன முறையில் திருடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி கச்சேரி தெருவில் வசிப்பவர் காமேஷ் (வயது 23). இவர் திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் உறவினருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார்.

காமேஷ் கடையில் இருந்தபோது முகக்கவசம் அணிந்து வந்த 2 நபர்கள் ரூ.500 நோட்டை கொடுத்து சில்லரை கேட்டுள்ளனர். காமேஷ் ரூ.500 பெற்றுக் கொண்டு 5 நூறு ரூபாய் நோட்டுக்களை அந்த நபர்களிடம் கொடுத்தார்.

அதற்கு முகக்கவசம் அணிந்து வந்திருந்த நபர்கள் ரூ.200-க்கு மட்டும் பத்து ரூபாய் நோட்டுகளை வழங்குமாறு காமேஷிடம் ஒருவர் பேச்சு கொடுத்து காமேஷின் கவனத்தை திசை திருப்பி விட்டு, மற்றொரு நபர் கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை திருடினார். இதனையடுத்து அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து கல்லாவை காமேஷ் பார்த்தபோது அதில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காமேஷ் திருத்தணி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கடையில் ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி நூதன முறையில் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story