தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு: கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்
தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
மஞ்சளாறு அணை
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பகுதிகளான, தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, கணவாய்ப்பட்டி குன்னுவாரன் கோட்டை சிவஞானபுரம் ஆகிய ஊர்களில் 3 ஆயிரத்து 386 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது,
புதிய ஆயக்கட்டு பகுதிகளான தேவதானப்பட்டி தெற்குவெளி, புல்லக்காபட்டி, டி.வாடிப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி பகுதிகளில் ஆயிரத்து 873 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
தண்ணீர் திறப்பு
அதன்படி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார். பழைய ஆயக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 200 கன அடி, புதிய ஆயக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நிகழ்ச்சியில் பெரியகுளம் கோட்டாட்சியர் பால்பாண்டி, தாசில்தார் காதர் ஷரிப், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவி பொறியாளர் ரமேஷ்வரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நேற்று அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. நீர்வரத்து 644 கன அடியாக இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.